குஜராத் கலவரம் - பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவரம் - பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
குஜராத் கலவரம் - பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா பகுதியில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவத்தில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மோடி உட்பட யாருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதனிடையே, இந்த வழக்கை குஜராத் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள், குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒன்றை 2009-ம் ஆண்டு அமைத்தனர். சுமார் 3 ஆண்டுக்கால விசாரணைக்கு பிறகு, தனது அறிக்கையை 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐடி தாக்கல் செய்தது. அதில், "குஜராத் கலவரத்துக்கும், மோடிக்கும் தொடர்பு இல்லை" எனத் தெரிவித்திருந்தது. இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை அறிக்கைக்கு எதிராக, ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வாத, பிரதிவாதங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்ததை அடுத்து, ஜூன் 24-ம் தேதிக்கு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி, இன்று இந்த வழக்கானது, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்ஐடி அறிக்கைக்கு எதிராக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com