”இப்போது போகிறேன்; ஆனா ஐபிஎஸ் அதிகாரியாக திரும்ப வருவேன்”-பெண் காவலர் சுனிதா

”இப்போது போகிறேன்; ஆனா ஐபிஎஸ் அதிகாரியாக திரும்ப வருவேன்”-பெண் காவலர் சுனிதா
”இப்போது போகிறேன்; ஆனா ஐபிஎஸ் அதிகாரியாக திரும்ப வருவேன்”-பெண் காவலர் சுனிதா

குஜராத்தில் அமைச்சர் மகனுடனான பிரச்னையில் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ள காவலர் சுனிதா, ஐபிஎஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் பாஜக அரசில், வராச்சா சாலை தொகுதி பாஜக எம்.எல்.ஏ குமார் கனானியின் மகனை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் காவல் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்தும், மாற்று முடிவுக்கான காரணம் குறித்தும் அவர் சில ஆங்கில இணையதளங்களுக்கு பேசியுள்ளார்.


அதில் அவர் கூறும் போது “ அழுத்தத்தின் காரணமாக நான் ஐபிஎஸ் அதிகாரியாக மாறத் தயாராகி வருகிறேன். நான் எனது முடிவை மேல் அதிகாரிகளுக்கு கூறி விட்டேன். அந்தச் சம்பவத்திற்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்தன. அதில் ஒருவர், நான் நீண்ட காலம் வாழப்போவதில்லை என்றும் மிரட்டினார். மேலும் அவர்கள் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர 50 லட்சம் தரவும் முன் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தான் நான் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சூரத் காவல் ஆணையருக்கு கோரிக்கை வைத்தேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் முன்பு தற்போது இரண்டு ஆண் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நான் தெருவில் நடந்து செல்லும் போது என்னை சிலர் பின் தொடர்கிறார்கள்.” என்றார்

சமூக வலைதளங்களில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கேட்ட போது “ அதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. சிலர் “லேடி சிங்கம்” என்ற பெயரில் தவறாகவும் செய்தியை கொண்டு சென்றனர். ஆனால் நான் எனது கடமையைதான் செய்தேன். இந்தச் சம்பவம் எனக்குள்ள குறைந்த அதிகாரத்தை எனக்கு எடுத்துக் காட்டியது. ஆகவே நான் ஐபிஎஸ் அதிகாரியாக மாறி திரும்ப வருகிறேன். ஒரு வேளை நான் ஐபிஎஸ் தேர்வில் தோல்வியடையும் பட்சத்தில்,ஒரு வழக்கறிஞராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ மாறுவேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com