‘குஜராத் மாடல்’ அம்பலப்பட்டுவிட்டது - கொரோனா உயிரிழப்பு குறித்து ராகுல் காட்டம்

‘குஜராத் மாடல்’ அம்பலப்பட்டுவிட்டது - கொரோனா உயிரிழப்பு குறித்து ராகுல் காட்டம்
‘குஜராத் மாடல்’ அம்பலப்பட்டுவிட்டது - கொரோனா உயிரிழப்பு குறித்து ராகுல் காட்டம்

‘குஜராத் மாடல்’ என்பது அம்பலப்பட்டுவிட்டதாக முன்னாள் காங். தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினக்கூலிகளாக உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் இந்தக் கொரோனா நோய்க்கு 343,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9,900 பேர் இதுவரை இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகள் பற்றிய விவரங்களை தினமும் வெளியிட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புள்ளி விவரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குறைக்கூறி வருகின்றன. இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜக அரசை குறிவைத்து ராகுல் காந்தி ஒரு கருத்தை அவரது ட்விட்டரில் முன்வைத்துள்ளார். அதில் "குஜராத் மாடல்" என்ற கோஷம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பிபிசியின் செய்திக் கட்டுரை ஒன்றையும் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

மேலும் அவரது பதிவில், “கொரோனா இறப்பு விகிதம்: குஜராத்: 6.25% மகாராஷ்டிரா: 3.73% ராஜஸ்தான்: 2.32% பஞ்சாப்: 2.17% புதுச்சேரி: 1.98% ஜார்கண்ட்: 0.5% சத்தீஸ்கர்: 0.35% என உள்ளது. ஆகவே குஜராத் மாடல் என்பது அம்பலமாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இறந்தவர்களின் சதவிகிதம், பிற மாநிலங்களைவிட அதிகமாக பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் தேசிய சராசரியான 2.86 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், குஜராத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 24,104 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com