விநோத சத்தம்: நடு இரவில் அலறி எழுந்த நபருக்கு அதிர்ச்சி..!
நடு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கேட்ட விநோத சத்தத்தால் அலறி எழுந்த நபருக்கு குளியலறையில் இருந்த முதலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீடுகளின் அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகியவற்றுக்குள் முதலைகள் குடியேறும் நிகழ்வுகள் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் சாதாரணம். ஏனென்றால் அங்கு ஊர்வன இனமான முதலைகள் போன்றவை சாதாரணமாக தென்படக்கூடியவை. ஆனால் இந்தியாவில் இது அரிதான ஒரு நிகழ்வு. இந்திய கிராமப்புறங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் பாம்புகள் பிடிக்கப்படுவது யதார்த்தமான ஒன்று ஆகும். இருந்தாலும் முதலைகள் வருகை விரல் விட்டு எண்ணக்கூடிய சம்பவங்களாக இன்றும் இருக்கின்றன. இதிலும் குளியலறையில் முதலை குடியேறியது வியப்பான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் வசிப்பவர் மஹேந்திரா பதியார். இவர் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விநோதமான சத்தம் ஒன்று கேட்கவே அலறி எழுந்துள்ளார். அந்த சத்தம் குளியலறையில் இருந்து வருவதை அறிந்த அவர், பூனையாக இருக்கலாம் என எண்ணி கதவை திறந்துள்ளார். ஆனால் உள்ளே 4.5 அடி நீள முதலை ஒன்று வாயை திறந்தபடி இருந்துள்ளது. அதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த மஹேந்திரா கதவை மூடிவிட்டு, அங்கிருந்து நகர்ந்துள்ளார். பின்னர் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அதிகாலை 2.45 மணிக்கு வனத்துறையினர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் குளியலறையில் இருந்த முதலை ஆபத்தான இனத்தை சேர்ந்தது என்பதால், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் சாதுர்யமாக அதைப்பிடித்துள்ளனர். அதன்பின்னர் முதலை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. பிடிக்கும்போது முதலை ஆவேசமாக அல்லது கடும் பசியுடன் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த முதலை விஷ்வமித்ரி நதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். கடந்த மாதம் வதோதரா பகுதியில் வெள்ளம் வந்தது குறிப்பிடத்தக்கது.