\
’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்!

’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்!

’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்!
Published on

போலி பாஸ்போர்ட் மற்றும் ஒட்டுத்தாடியுடன் நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் உள்ள பிசியான விமான நிலையங்களில் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அம்ரிக் சிங் என்பவர் வீல் சேரில் வந்தார். அவருக்கு 81 வயது. வெள்ளை தாடி, கண்ணாடியுடன் காட்சியளித்த அவர், தன்னால் நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் வீல் சேரில் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்தார். 

அமெரிக்காவின் நியூயார்க் விமானத்துக்காக காத்திருந்த அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை நேரடியாக பார்ப்பதைத் தவிர்த்துள்ளார், அவர். அவரது உடல், 80 வயது முதியவரை போல தெரியவில்லை. இதனால் சந்தேகம் மேலும் வலுத்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோதுதான், அவர் தலைக்கு வெள்ளை ’டை’யும் ஒட்டுத்தாடியும் வைத்திருந்தது தெரிய வந்தது. 

அவரை பிடித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஜயேஷ் படேல் என்பதும் போலி பாஸ்போர்ட் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து நியூயார்க் செல்ல இருந்ததும் தெரியவந்தது. ’அயன்’ திரைப்படத்தில் இப்படித்தான் வயதான தோற்றத்தில் நடிகர் சூர்யா, விமான நிலையத்துக்குச் செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

அதே போல சென்றுள்ள படேல் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஏன் ஆள்மாறாட்டம் செய்து அவர் நியூயார்க் செல்ல முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com