ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் - குஜராத் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்து
ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் என குஜராத் இந்தி பாடப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு சிறப்புமிக்கதாகவும், புனிதமாகவும் இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 4ம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தின் 13வது பக்கத்தில் இத்கா எனும் கதையில், இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் நோன்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் தொற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது அச்சடிக்கும்போது ஏற்பட்ட பிழை என்று அம்மாநில பாடப்புத்தக வாரியத்தின் தலைவர் நிதின் பெத்தானி விளக்கம் அளித்துள்ளார். இதற்கு முன்பும் இதேபோல் 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஏசுவை அருவருப்பான வார்த்தைகளால் குறிப்பிடப்பட்டு, பின்னர் திருத்தப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதாகவும் இவ்விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மதங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையுள்ள விஷயங்கள் குறித்து அரசு சார்பாக வெளியிடும் கருத்துகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்களின் புனித நோம்பு குறித்து தவறான கருத்தை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.