குஜராத்: குதிரையில் திருமணம் ஊர்வலம் சென்ற பட்டியலின மணமகன் மீது சாதியைச் சொல்லி தாக்குதல்! வீடியோ

குதிரையில் அமர்ந்து திருமணம் ஊர்வலம் சென்ற பட்டியலின மணமகன் ஒருவரை, பிற சாதியினர் கீழே தள்ளி தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் வீடியோ
குஜராத் வீடியோட்விட்டர்

என்னதான் சாதிகள் இல்லையென்று எழுத்திலும் பேச்சிலும் சொல்லப்பட்டாலும், நாடு முழுவதும் சாதி ரீதியிலான இழிவுகள் அரங்கேறி வருகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, ஆணவக் கொலைகளை எடுத்துக்காட்டலாம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆணவக் கொலைகள் அரங்கேறி உள்ளன. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் வேங்கைவயல் சம்பவம் அதிர்ச்சியான அந்த உண்மையை உணர வைத்தது. அந்த வகையில் குஜராத் மண்ணில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தற்போது தாக்கப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் சடசனா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் சாவ்தா. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவருக்கும் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பேசி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று, மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகன் குதிரையில் அமரவைத்து ஆட்டம்பாட்டத்துடன் அவர்களுடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். வடமாநிலங்களில் குதிரை மீது மணமகன் அழைத்துச் செல்லப்படுவது பாரம்பரியமான நடைமுறைகளில் ஒன்றாக இன்றும் உள்ளது.

இதையும் படிக்க: இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு.. மயானத்தில் உயிருடன் எழுந்த ஒடிசா பெண்.. பயத்தில் அலறி ஓடிய மக்கள்!

இந்தச் சூழலில்தான் குதிரையில் அமர்ந்து மணமகளின் வீட்டுக்கு சென்ற மணமகன் விகாஸ் சாவ்தாவை, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அவரது சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தி தாக்கி உள்ளார். தொடர்ந்து, குதிரை மீது அமர்ந்திருந்த மணமகன் விகாஸையும் தாக்கி கீழே தள்ளி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தாக்குதலில் 4 பேர் ஈடுபட்டதாக மணமகனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள புகாரில், ’குதிரையில் இருந்து மணமகனைக் கீழே தள்ளி ஓங்கி அறைந்தார்கள். ’எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனைத் தாக்கினார்கள். காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் அகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து உள்ளனர். கைதான 4 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம், ஆக்ராவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், உயர்வகுப்பினர் என்று சொல்லப்படும் சமூகத்தினரால் தாக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் வீடியோ
”நீங்களா குதிரையில் ஊர்வலம் போகக் கூடாது”- பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்! நின்றுபோன திருமணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com