குஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் பாஜக அமைச்சர் மகனையே தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்.!

குஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் பாஜக அமைச்சர் மகனையே தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்.!
குஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் பாஜக அமைச்சர் மகனையே தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்.!

குஜராத்தில் ஊரடங்கு விதிகளை மீறி காரில் சுற்றிய அமைச்சரின் மகனை, மடக்கி விசாரித்தற்காக பெண் காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் பாஜக அரசில் வராச்சா சாலை எம்.எல்.ஏ ஆகவும், சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆகவும் உள்ளவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷின் நண்பர்கள் சிலர் ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் காரில் மணிக் கணக்கில் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதனையடுத்து, அவர்கள் தங்களது நண்பர் பிரகாஷ் கனானியை அந்த இடத்திற்கு வரவழைத்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த பிரகாஷ் கனானி பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும் அந்தப் பெண் காவலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தன்னுடைய தந்தையும் அமைச்சருமான குமாருக்கும் போன் செய்து பெண் போலீசிடம் பேச வைத்துள்ளார். அங்கு நடந்த சம்பவம் கேமிராவில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் மகன் உடனான வாக்குவாதத்தின் போது அந்தப் பெண் காவலர், நான் உங்களின் அடிமை இல்லை என்று கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரகாஷ் கனானியும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சுனிதா யாதவ் காவல் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பலரும் சுனிதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு பின்னர் உடல் நிலை சரியில்லை என்று விடுப்பில் சென்ற யாதவ் இன்னும் இது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com