அறிவிப்புக்கு முதல்நாள் யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்
நெருக்கடி தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவதற்கு ஒருநாளைக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடி பணத்தை எடுத்துள்ளது.
யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஏடிஎம் மையங்களில் குவிந்தனர். வாராக் கடனால் பாதிக்கப்பட்டதை அடுத்து யெஸ் வங்கி நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட ரிசர்வ் வங்கி, இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
யெஸ் பேங்க் சீர்குலைந்ததற்கு என்ன காரணம் என ஆராயவும் தவறுக்கு காரணமான நபர்கள் யார் என கண்டறியவும் ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனிடையே, யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் நிறுவனரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மும்பையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அத்துடன் பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக ராணா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வாராக்கடனால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடி பணத்தை எடுத்துள்ளது. வதோதராவைச் சேர்ந்த வாகன விற்பனை தொடர்பான நிறுவனம்தான் இந்த பணத்தை எடுத்துள்ளது. யெஸ் வங்கி சந்தித்து வரும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்து பரோடா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரி சுதிர் படேல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருமலா திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியில் இருந்து சுமார் 1300 கோடி ரூபாயை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்திருந்தது. நெருக்கடிகளை கணித்து வங்கியில் இருந்த பணத்தை எடுத்ததாக தேவஸ்தானம் போர்டின் புதிய தலைவர் தெரிவித்தார்.