குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய் ரூபானி, குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பாஜக சார்பில் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராக நீடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். வரும் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிதாக முதல்வரை நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ரூபானியின் திடீர் ராஜினாமாவுக்கான காரணம் குறித்து பாஜக தரப்பில் இருந்து இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்கு பிறகு முதல்வரானார். 2016ஆம் ஆண்டு முதல் குஜராத் முதல்வராக உள்ள விஜய் ரூபானி தலைமையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.