பா.ஜ.க. கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் பா.ஜ.க. கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் இருந்த சில குடிசைகளை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி பா.ஜ.க. கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஹஸ்முக் பட்டேல் சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால், பா.ஜ.க. கவுன்சிலர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் ஹஸ்முக் படேலை திடீரென தாக்கத் தொடங்கினர். அதோடு அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பா.ஜ.க. கவுன்சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 30க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.