டிவி நேரலை ஒளிபரப்பின்போது மாரடைப்பு: பரிதாபமாக உயிரிழந்தார் கெஸ்ட்!
டிவி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரில் ஒளிப்பரப்பாகும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ’வணக்கம் ஜே.கே (ஜம்மு காஷ்மீர்)’ என்ற நிகழ்ச்சி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை ஒளிபரப்பாவது வழக்கம். இதில் திரைப்பட கலைஞர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசு உயரதிகாரிகள் உட்பட பல்வேறு துறை வல்லுநர்கள் இடம்பெற்று பேசுவார்கள். இந்த நிகழ்ச்சி ’லைவ்’வாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீர் மாநில மொழி மற்றும் கலை கலாச்சார அகாடமியின் முன்னாள் செயலாளர் ரிதா ஜிதேந்திரா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்படியே இருந்த இடத்தில் இருந்து பின் பக்கமாக அவர் சரிந்தார். இதைக்கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ஓடிச் சென்று தூக்கினார். ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.