கொரோனா கால மகத்துவர்: ஆட்டோக்களை ஆக்சிஜன் படுக்கையாக மாற்றிய ஓட்டுநர்கள்

கொரோனா கால மகத்துவர்: ஆட்டோக்களை ஆக்சிஜன் படுக்கையாக மாற்றிய ஓட்டுநர்கள்
கொரோனா கால மகத்துவர்: ஆட்டோக்களை ஆக்சிஜன் படுக்கையாக மாற்றிய ஓட்டுநர்கள்

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் படுக்கையின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் நோயாளிகளை காக்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களின் ஆட்டோவிலேயே ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி நோயாளிகளுக்கு சேவையளித்து வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பிலிருக்கும் மாநிலங்களில் ஒன்று, மகாராஷ்டிரா. அங்கு இப்போதைய நிலவரப்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 45,000-க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் 46,781 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 816க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகின. இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் இறந்தவர்கள் 78,007 என அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தங்களின் மோசமான காலகட்டத்தில் இருந்து வரும் மகாராஷ்டிரா மாநிலம், கொரோனாவின் கோர தாண்டவத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாட்டோடு சேர்த்து ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டையும் சேர்த்து எதிர்கொண்டு வருகிறது. இதனால் எண்ணற்ற கொரோனா நோயாளிகள் அங்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களை காக்கும் நோக்கத்தில் மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றாக இணைந்து, கொரோனாவுக்கு பயன்படும் வகையிலான 'ஜூகாத் ஆம்புலன்ஸ்' என்ற ஆட்டோவிலேயே ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்களில், மூன்று ஆட்டோக்களில் ஆக்சிஜன் சேவை தரப்படுவதாக 'ஜூகாத் ஆம்புலன்ஸ்' என்ற அந்த சேவையை தொடங்கிய கேஷவ் என்பவர் சொல்லியிருக்கிறார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து பயன்பெறலாமாம்.

இதுபற்றி அவர் விரிவாக பேசியபோது, "நாங்கள் வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 6 முதல் 7 மணி நேரம் வரை நீடித்திருக்கும். எங்களை அணுக, உதவி எண் வழங்கியிருக்கிறோம். அதன்மூலமாக இச்சேவைக்காக எங்களை நாடலாம். இந்த ஆட்டோக்களிலுள்ள ஓட்டுநர்களுக்கு, நோயாளிக்கு எப்படி பாதுகாப்பாக ஆக்சிஜன் வழங்குவது எனும் வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அவர் நடந்துக்கொள்வார். எங்களுக்கு சில மருத்துவர்களோடும் தொடர்பு உள்ளது. நோயாளிக்கு சிக்கல் அதிகரித்தால், உடனடியாக அவரை அம்மருத்துவரிடம் அழைத்துச்சென்றுவிடுவோம்" எனக்கூறியுள்ளார்.

இந்த மூன்று ஆட்டோக்கள் உட்பட, ஆட்டோ நிறுத்தத்திலுள்ள அனைத்து ஆட்டோக்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான சேவைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com