ஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் கண்களை பொறுத்தது என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளா மாநிலத்தில் மாத்ருபூமி நாளிதழுக்கு சொந்தமான கிருஹலட்சுமி என்ற வார இதழ் வெளியாகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அந்த இதழில் கட்டுரை வெளியானது. இதழின் அட்டை படத்தில் ஒரு பெண், குழந்தைக்கு தாய்ப்பாலுாட்டுவது போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. கேரளாவில் மிகப் பெரிய விவாதத்தை இந்த அட்டைப்படம் ஏற்படுத்தியது. அட்டைப்படத்தில் இருக்கும் கிலு ஜோசப் என்ற மாடல் நடிகை தாக்கப்பட்டார். இதையடுத்து பத்திரிகை மீதும் கிலு ஜோசப் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனித உடலை இந்திய கலைஞர்கள் எப்போதுமே கொண்டாடுகின்றனர் என்றும் அதற்கு ராஜா ரவிவர்மா ஓவியங்கள், அஜந்தா சிற்பங்கள் சான்று என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆபாசம் என்பது, பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தே என்பதால் அந்த அட்டைப்படத்தில் பிரசுரமான புகைப்படம் எந்தவிதத்திலும் பெண்களை இழிவுபடுத்தவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.