பிளாஸ்டிக் தடையை கண்டுகொள்ளாதது ஏன்? டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
தடையை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டு கொள்ளவில்லை என டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுடன், பிளாஸ்டிக் குப்பைகளை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை டெல்லி அரசு முறையாக கடைபிடிக்காத நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்வது குறித்த வழக்கு நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான, தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, முழுமையாக அமல்படுத்தப்படாதது ஏன்?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தடையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பதிலளித்தார். இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதி, 'தெருக்கள் தோறும் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளதை டில்லி அரசு கவனிக்காதது ஏன்?' எனக் கேட்டார். மேலும், 'பிளாஸ்டிக் மீதான தடையை முழுமையாக அமல்படுத்தி, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் குப்பைகளை போடுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்றும் அவர் உத்தரவிட்டார்.

