ராயல் என்ஃபீல்டு ஓட்டியதற்காக சிறுமி மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்
ராயல் என்ஃபீல்டு ஓட்டியதற்காக சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேசம், நொய்டா, மிலக் கதனா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் மாவி. இவர் ஜர்சா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது மகள் கடந்த 30 ஆம் தேதி வீட்டின் அருகே புல்லட் (ராயல் என்ஃபீல்டு) ஓட்டி சென்றுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த சில பேர் சிறுமி பைக் ஓட்டக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து எனது வீட்டிற்கு துப்பாக்கியுடன் வந்த 4 பேர் மேல் நோக்கி சுட்டு எங்களை மிரட்டினர். இனிமேல் உங்களது மகள் புல்லட்டை ஓட்டக்கூடாது எனவும் மீறினால் குடும்பத்தையே கொன்று விடுவோம் என மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாடிக்கு ஓடினேன். அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். நான் 100 க்கு தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் இதை போலீசில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினர். நான் யாரேனும் உதவி செய்யுங்கள் என கத்தினேன். பின்னர்தான் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சிறுமி மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை அவர்கள் ஆட்சேபித்துள்ளனர். ஐபிசி 506, 504, 323, 352, 425 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், சச்சின், கல்லு, மற்றும் இன்னும் இரண்டு பேர்கள் என 4 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடி வருகிறோம்.” எனத் தெரிவிக்கின்றனர்.