பாலக்காடு டூ பெங்களூரு:பேரனின் திருமணத்திற்காக ஹெலிகாப்டரில் பயணித்த தாத்தா - பாட்டி
பெரும்பாலும் தொலை தூர பயணம் மேற்கொள்ள கார்களை பயன்படுத்துவதுதான் வழக்கம். இன்றைய கொரோனா சூழலில் கேரளாவை சேர்ந்த வயதான கே.என்.லட்சுமிநாராயணன் - சரஸ்வதி தம்பதியினர் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு என்பதால் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ஹெலிகாப்டரில் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அசத்தியுள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள கல்பதியை சேர்ந்தவர் 90 வயதான கே.என்.லட்சுமிநாராயணன். பெங்களூருவில் உள்ள தனது பேரப்பிள்ளையின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவரும், அவரது மனைவி 85 வயதான சரஸ்வதியும் பாலக்காட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர்.
கே.என்.லட்சுமிநாராயணனின் மகன் தனது அப்பா - அம்மாவுக்காக ஒரு லட்ச ரூபாய் செலவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்களது பயணத்தை சுகமாக்கியுள்ளார்.
"நாங்கள் எங்கள் பேரன் டாக்டர் சந்தோஷின் திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினோம். சாலையில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் தான் என் மகன் இதற்கு ஏற்பாடு செய்தான்.
எங்களுக்கு இந்த வயதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறோம். வான் வழியாக எங்களது முதல் பயணம் இது” என்று ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்பு லட்சுமிநாராயணன் தெரிவித்திருந்தார். இருவரும் பாலக்காட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சிப்சன் ஏவியேஷன் என்ற நிறுவனம் ஹெலிகாப்டரை இந்த தம்பதியினருக்கு ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளரான லட்சுமிநாராயணன் 'காவிரி முதல் நீலா வரை: பாலக்காட்டின் தமிழ் அக்ரஹாரங்களின் வரலாறு' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பேரனின் திருமணத்தை முடித்துக் கொண்டு நாளை ஹெலிகாப்டரில் பாலக்காடு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.