ராணுவத்தினரின் ஓய்வூதியத்துக்கான நிதி குறைப்பு... சவாலை சந்திக்கும் பாதுகாப்புத் துறை!

ராணுவத்தினரின் ஓய்வூதியத்துக்கான நிதி குறைப்பு... சவாலை சந்திக்கும் பாதுகாப்புத் துறை!
ராணுவத்தினரின் ஓய்வூதியத்துக்கான நிதி குறைப்பு... சவாலை சந்திக்கும் பாதுகாப்புத் துறை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.4.71 லட்சம் கோடி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் மூலதன செலவு, கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்டதை விட தற்போது கிட்டத்தட்ட ரூ.23,500 கோடி அதிகம். அதாவது, பாதுகாப்பு படைகளின் மூலதன செலவில் கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பாதுகாப்புக்கான மூலதன செலவினத்தின் மிக உயர்ந்த அதிகரிப்பு இது.

முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய மசோதாவைத் தவிர்த்து, பாதுகாப்புத் துறைக்கு இந்த ஆண்டு ரூ.3.62 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படைகளுக்கான மூலதன செலவு ரூ.1.35 லட்சம் கோடி. இதற்குமுன்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1.14 லட்சம் கோடியை விட இது 18.75 சதவீதம் அதிகம்.

ஆயுதப்படைகளின் மூலதன செலவினத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.1,34,510 கோடி. கடந்த ஆண்டு ஏற்பட்ட செலவினங்களைக் கொண்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படைகளை நவீனமயமாக்குவதற்கு அரசாங்கம் அதிக மூலதன செலவினங்களை எதிர்பார்க்கிறது. இதனால்தான் மூலதன செலவினத்திற்காக புதிய பட்ஜெட்டில் கூடுதலாக 550.72 கோடி ரூபாய் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட மூலதன செலவு ரூ.32,392.38 கோடி. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.33,213.28 கோடியாக இருந்தது. இது ஒதுக்கப்பட்ட தொகையை விட 2.5 சதவீத அதிகம். இதனால் இந்த ஆண்டு முன்பை விட கூடுதலாக ரூ.36,481.90 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடற்படையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.37,542.88 கோடியாக உள்ளது. இது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.26,688.28 கோடியை விட 41 சதவீதம் ஆகும். விமானப் படையைப் பொறுத்தவரை, ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவு பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.43,281.91 கோடியிலிருந்து திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.55,055.41 கோடியாக உயர்ந்து 27.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியதுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இந்த ஆண்டு மொத்த பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்காகும். இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, அரசாங்கம் தனது பட்ஜெட்டில் வீரர்களின் ஓய்வூதியங்களுக்காக 1,33,825 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தாலும், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.1,25,000 கோடி மட்டுமே. இதனால் 2021-22-க்காக ரூ.1,15,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 18,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதால் ஓய்வூதிய மசோதா கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு குறைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓய்வூதிய பட்ஜெட்டை குறைப்பது அரசாங்கத்திற்கும் ஆயுதப்படைகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com