இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை சட்டத்தை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு?
இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒரு கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது, மே 23 ஆம் தேதியன்று மாநிங்களுக்கு மத்திய அரசு, இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடை விதித்த சட்டத்திருத்தம் தொடர்பாக அனுப்பிய அறிவிப்புக்கு, அவர்கள் அனுப்பிய பதில்களாலேயே மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. நாங்கள் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிய கோப்பில், இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்த சட்டத்திற்கு எதிராக பல மாநில அரசுகள் தங்களது முடிவுகளை கூறியுள்ளன. ஆகையால் அந்த சட்டத்தை நாம் திரும்பப் பெற வேண்டும். வேண்டுமென்றால் அச்சட்டத்தில் மாறுதல்கள் செய்து அமல்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வர இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்று சட்ட அமைச்சகம் பதிலளித்துள்ளது.
கடந்த மே மாதம் மத்திய பாஜக கூட்டணி அரசு, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்தது. இதனால் பாஜக அரசு மீது நாடு முழுவதும் கடும் விமர்சனமும், எதிர்ப்பும் கிளம்பியது. பாஜக அரசு தங்கள் கருத்தியலை மக்கள் மத்தியில் திணிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், விவசாயத்திற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களை, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். பல்வேறு இடங்களில் கொலையும் செய்தனர். இதனால் இச்சட்டத்திற்கு மக்கள் மத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தனிமனித உரிமை, உணவு உண்ணும் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாகவும் பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. இச்சட்டத்தால் விவசாயிகள் மற்றும் இறைச்சி விற்பனையாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறும்போது, விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்கவே இந்த சட்டம். இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது மக்களின் உணவு பழக்கத்தில் தலையிடவோ இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை. தேவை ஏற்பட்டால் சட்டத்தை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு திரும்பப்பெரும் என்று கூறினார்.
மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, மாநில அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக சட்டத்தை இயற்றின என்பது குறிப்பிடத்தக்கது.