‘அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூடாது’ - மோடி உரை
வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட 16 வகையான திட்டத்தை உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மதுராவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்த பசுக்களை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயைத் தடுக்கும் இந்தத் திட்டத்தை 12 ஆயிரத்து 652 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைத்த அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 சதவிகிதம் இலக்கை எட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை சேகரித்து அவற்றை பிரித்தெடுக்கும் பெண்களுடன் மோடி கலந்துரையாடினார். எவ்வாறு நெகிழிப் பொருட்களை பிரிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்த அவர் சில நெகிழிப் பொருட்களை பிரித்தும் கொடுத்தார். நெகிழியை அழிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டையும் பிரதமர் பார்வையிட்டார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மையத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய பிரதமர் மோடி வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்காக சுயஉதவிக் குழு, சமூக அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார். அத்துடன் உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகையும் மதுரா தொகுதி எம்பியும் ஹேமமாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.