வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: குஜராத் அரசு
குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்களிடம் அதிகாரிகள் காரணம் கேட்டறிந்தனர்.
குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் அண்மையில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் வசிக்கும் பிற மாநில தொழிலாளர்கள் எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அச்சமடைந்த வெளிமாநிலத்தவர், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாயின. பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது. எனினும், சூரத், வதோதரா உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களுடன் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் வெளி மாநில தொழிலாளர்களிடம் காரணங்களை கேட்டறிந்தனர். இதில் தசரா பண்டிகைக்காக சொந்த மாநிலங்களுக்குச் செல்வதாக பலர் தெரிவித்துள்ளனர்.