குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு, இனி மரண தண்டனை ?
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் கொடூர சம்பவம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தைகளை பாலினக் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குழந்தைகள் பாலினக் கொடுமை (போக்சோ) சட்டத்தில் மரண தண்டனை கொண்டு வரப்படும் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என தெரியவந்து உள்ளது. 12 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இப்போது இருக்கும் போஸ்கோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் வகையில் ஷரத்து இல்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே உள்ளது. 2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு பின்பு, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லும் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.