பிரதமருக்கு கோரிக்கை விடுத்த சுதா சந்திரன் - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

பிரதமருக்கு கோரிக்கை விடுத்த சுதா சந்திரன் - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த சுதா சந்திரன் - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

விமான நிலையங்களில் அவதிப்படுவது தொடர்பாக நடிகை சுதா சந்திரன் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சோதனை, பயணம் உள்ளிட்டவை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981-ஆம் ஆண்டு திருச்சி அருகே விபத்தில் சிக்கினார். இதனால், அவரது வலது காலில் பாதி நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு செல்லும்போது ஒவ்வொரு சோதனைக்காக செயற்கை காலை அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளாவதாக சமீபத்தில் கவலை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சுதா சந்திரன், ``பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் கொடுக்கிறது. எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப்படுத்துகிறேன். ஆனால், விமான நிலைய அதிகாரிகளிடம் செயற்கை காலை சோதனைக்காக காட்டவேண்டியிருக்கிறது. வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள்" என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

பின்னர் சிஎஸ்ஐஎஃப் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்தது. ``இனிமேல் எந்த சிரமமும் ஏற்படாத வகையில் எங்கள் பணியாளர்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று சுதா சந்திரனுக்கு உறுதியளிக்கிறோம்" என்று உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், சுதா சந்திரன் கோரிக்கைக்கு பிறகு, தற்போது மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் விமானப் பயணத்தை எளிதாக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் ``பயணிகளின் ஊன்றுகோல் மற்றும் பிற சாதனங்களை அரிதான சந்தர்ப்பங்களில், அதுவும் போதுமான நியாயம் இருந்தால் மட்டுமே எக்ஸ்ரே போன்றவை செய்யப்பட வேண்டும்" என்பது போன்ற வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. விமான நிலைய ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தனித்தனியாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com