“முஸ்லிம் ஆண்களை குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது” - சசிதரூர்
எல்லா மதங்களிலும் மனைவிகளை கணவர்கள் கைவிடுவது நிகழ்வதாகவும் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து சட்டம் இயற்ற வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார்.
மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும், முத்தலாக் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.
இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் இந்த மசோதா, கடும் அமளிக்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அமலில் உள்ள அவசரச் சட்டத்தின் நகலையே மசோதாவாக, மத்திய அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பொதுவாக சட்டத்தை கொண்டு வர வேண்டும். முஸ்லிம் ஆண்களை மட்டும் குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது. மற்ற மதங்களைச் சேர்ந்த ஆண்களும் மனைவிகளை கைவிடுகிறார்கள். மசோதாவில் எவ்வித நடைமுறை பாதுகாப்புகளும் இல்லை. அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வையுங்கள். இது ஒரு பாரபட்சமான மசோதா. இந்த மசோதாவினால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “இந்த மசோதா பெண்களுக்கான நீதி மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்கு உரியது. முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்” என்றார். அதேபோல் ஓவைசி பேசுகையில், “அந்த மசோதாவின் படி முத்தலாக் செய்யும் கணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். கணவர் சிறையில் இருக்கும் காலங்களில் பெண்களின் வாழ்க்கை நிலையை எப்படி பாதுகாப்பார்கள். இது பிரச்னையை தீர்க்கும் விதமாக இல்லை” என்று தெரிவித்தார்.