சிறப்பு பாதுகாப்பு படை சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
1985-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இதற்கான சட்டம் கடந்த 1988-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப் படைகளிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பாதுகாப்பு படையில் நியமிக்கப்படுவார்கள்.
இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தற்போது பதவியிலிருக்கும் பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். பிரதமர் பதவியிலிருந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவியிலிருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை இந்த படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை சில நாட்களுக்கு முன்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.