பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை - யூடியூப்பில் வீடியோ முடக்கம்

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை - யூடியூப்பில் வீடியோ முடக்கம்
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை - யூடியூப்பில் வீடியோ முடக்கம்

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தின் வீடியோக்களை, மத்திய அரசு உத்தரவின்பேரில் யூடியூப், ட்விட்டர் முடக்கியுள்ளன.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஊடகமான பிபிசி கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. 'India: The Modi Question' என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிபிசி ஆவண படத்துக்கான லிங்குகளும், படம் தொடர்பான கருத்துகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, பிபிசியின் ஆவணப் படத்தை யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்து உத்தரவிட்டது. இதனை ஏற்று யூ டியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் ஆவணப்படங்கள் குறித்த வீடியோக்கள், பதிவுகளை நீக்கி வருகின்றன. ட்விட்டரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிபிசி ஆவண படம் வெளியாக ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆவணப் படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. எனவே ஆவணப் படம் தொடர்பான கருத்துகளை நீக்க யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பிபிசி ஆவண படத்துக்கான இணைப்புகளை நீக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்''எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ட்வீட்களை ட்விட்டர் நீக்கியது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பிரையன், 'பிபிசி ஆவணப்படத்தின் எனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியுள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. ஒரு மணி நேர பிபிசி ஆவணப்படம், சிறுபான்மையினரை பிரதமர் எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது' என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com