நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்?
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும் அல்லது தற்போதுள்ள கட்டடத்தை புனரமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைக்கவும் அல்லது புதிதாக ஒரு கட்டடம் கட்டவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பொதுபணித்துறை ஆயத்தங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தை புதுபிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஏனென்றால் தற்போது உள்ள நாடாளுமன்றத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது கடினமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.