
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தினவிழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கில் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்குதான் நாற்காலிகள் இருந்தன. மேலும் கூடுதலாக நாற்காலிகள் போட்டு பழங்குடியின மக்கள் அமரவைக்கப்பட்டனர்.
நாற்காலி இல்லாததால் ஒருசில பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்தனர். இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களில் சிலர், தங்களை கீழே உட்கார வைப்பதுதான் கௌரவ விழாவா? என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் அவர்களை ஏன் தரையில் அமர வைத்தீர்கள் எனக் கேள்வியெழுப்பியதை அடுத்து நாற்காலியில் அமர வைத்தனர். மேலும் பழங்குடியின மக்கள் கூறும் புகார்களை பதிவு செய்ய அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதுமட்டுமில்லாமல், பழங்குடியின மக்களை தரையில் அமரவைத்தது ஏன்? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.