எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த விவகாரத்தில், கோவா, மணிப்பூர், மேகாலயா உதாரணங்களுக்கு எதிராக கர்நாடக ஆளுநர் செயல்பட்டார் என்பதே பிரதான விமர்சனம். முந்தைய உதாரணங்கள் சொல்வது என்ன? பார்க்கலாம்.
2017 மார்ச்சில் கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வர்டு கட்சி 3 இடங்களையும் சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர். ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 17 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்த போதும், பாஜக மற்ற இரண்டு மாநிலக் கட்சிகள் மற்றும் இரு சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று, 21 இடங்களைக் கொண்ட கூட்டணியை உருவாக்கி 'தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி' - என்ற அடிப்படையில் ஆட்சிக்கு உரிமை கோரியது. ஆளுநரும் இதனை ஏற்று பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இது பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. அப்போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டவர்கள் 'பெரிய கூட்டணியை ஆட்சிக்கு அழைப்பதில் தவறு என்ன?' - என்று கேள்வி கேட்டனர். காங்கிரஸ் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது, ஆனால் உச்சநீதிமன்றம் பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்த நிலையில் பாஜகவின் மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்வராகப் பதவியேற்றார்.
கோவாவோடு சேர்த்து தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 4 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களிலும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 28 இடங்களை வென்ற காங்கிரஸைத் தாண்டி, 4 இடங்களைப் பெற்ற நாகாலாந்து மக்கள் முன்னணி, 4 இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சி, ஒரு இடத்தைக் கொண்ட லோக் ஜனசக்தி ஆகியவற்றோடு 33 இடங்களைக் கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பாஜக அமைத்தது. இதனையே ஆளுநரும் பதவியேற்க அழைத்தார். இதன் மூலம் மணிப்பூர் வரலாற்றின் முதல் பாஜக முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றார்.
மேகாலயாவில் கடந்த பிப்ரவரி மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு பாஜக வென்ற தொகுதிகள் 2 மட்டும்தான். ஆட்சிப் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 21 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசைத் தாண்டி, 19 இடமுள்ள தேசிய மக்கள் கட்சி, 6 இடமுள்ள ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி, 4 இடமுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி, 2 இடமுள்ள தேசிய மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து 31 இடங்களைக் கொண்ட ஒரு பெரிய 'தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி'யை உருவாக்கியது பாஜக.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் பெரியது - என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணியையே ஆளுநர் அழைக்க மேகாலயாவில் பாஜக கூட்டணி அங்கு ஆட்சியைப் பிடித்தது.
எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் இதற்கு முன்பு 'பெரிய, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி'யையே ஆளுநர்கள் ஆட்சி அமைக்க அழைத்து வந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மீண்டும் 'தனிப்பெரும் கட்சி' என்ற அடிப்படையில் பாஜகவை அழைத்தது மீண்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, ஆளுநர் ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பதை, ஆளுநர்தான் தீர்மானிப்பார், மக்களால் தீர்மானிக்க முடியாது என்பதையே இவை நமக்குக் காட்டுகின்றன.