ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் வழியே இந்த நாடு உருவானது - ஆளுநர் ஆர்.என் ரவி

ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் வழியே இந்த நாடு உருவானது - ஆளுநர் ஆர்.என் ரவி
ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் வழியே இந்த நாடு உருவானது - ஆளுநர் ஆர்.என் ரவி

மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாக்கவில்லை. ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் பாரதம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆரன் ரவி கூறியுள்ளார்.

சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலாக கருதப்படும் ஹரிவராசனம் பாடல் எழுதப்பட்டு நூறு வருடங்கள் ஆகும் நிலையில், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெலங்கானா புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆன்மீகப் பெரியோர்கள் ஐயப்ப பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இசைஞானி இளையராஜா நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நூற்றாண்டு விழா குழுவில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாடகி சித்ரா, நடிகர் ஜெயராம், பி.வாசு, நடிகர் அஜய் தேவ்கன், கணக்காளர் குருமூர்த்தி, ஓய்வுபெற்ற நீதிபதி குமார், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

(சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை சாற்றும் முன்பு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்படுகிறது வருடம் தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை அபிஷேகங்களில் ஐயப்பனுக்கு தவறாமல் இந்த பாடல் ஒலிக்கப் படுகிறது. தற்போது நாம் கேட்டுக் கொண்டிருக்கும் ஹரிவராசனம் பாடல் கே ஜே ஜேசுதாஸ் பாடப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 1923ஆம் வருடம் கோணக்காட்டு ஜானகி அம்மாவால் எழுதப்பட்டது)

பின்னர் தமிழக ஆளுநர் ரவி பேசியதாவது, ‘’ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரா! ஒரே கடவுள்! அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதைத்தான் நமது மார்க்கம் கூறுகிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது அவசியமாகிறது. இந்திய அரசியலமைப்பு தான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. தர்மம் என்பது மத சம்பந்தப்பட்டது அல்ல. அனைவரையும் உள்ளடக்கியது. கிமு 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என்று சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார். நம் வேற்றுமையில் வாழ்கிறார் எனக் கூறப்படுகிறது. ஒரு மரம் என்றால் அதில் எண்ணற்ற இலைகள் உள்ளது. அந்த இலைகளுக்கும் மரத்திலிருந்து சத்துக்கள் செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்திய அரசியலமைப்பின் சாராம்சமாக உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போது நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. ’ஏகம் சத் விப்ரா பஹுதா’ வதந்தி என அத்வைத தத்துவங்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை. இந்த நாடு ரிசிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் தத்துவத்தை இந்து மதம் சொல்லவில்லை. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தில் வளர்ச்சியைப்போல ஆன்மிகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்துவரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும். சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார் பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால் அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமையை’’ என பேசினார்.

தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார். அப்போது, ’’ஐயப்பன் புகழை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐயப்பன் வாழ்வியல் முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஐயப்பனை தரிசித்துவிட்டு வந்ததால் எதையும் எப்பேர்பட்ட பிரச்னையையும் தாங்க முடியும். இந்து மதம் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் சார்ந்தது. உடலையும் மனதையும் எப்படி பாதுகாக்க வேண்டும் எனும் வழிமுறையை இந்த ஆன்மிகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

ஹரிவராசனம் பாடல் உட்பட இந்து மதத்தில் இருக்கும் மந்திரம், யோகம் ஆகியவற்றிற்கு 108 எனும் எண் முக்கியமானது. ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் உள்ளது. அதேபோல மனித உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்சுக்கு 108 என வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. ஐயப்பனின் 18 படிகளை தாண்டிவிட்டால் படிப்படியாக முன்னேறலாம் என்பது ஐயப்பன் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆன்மிகம் என்பது விஞ்ஞானம்தான். உங்கள் உடலும் மனதும் கெட்டுப்போனால் அவ்வளவுதான். ஏனென்றால் நீங்கள் பின்பற்றும் கொள்கை அப்படிப்பட்டது.

24 மணி நேரமும் பிராணவாயுவை கொடுக்கும் அரசமரத்தை சுற்றுகிறோம். இந்து மதம் விஞ்ஞானத்தோடு தொடர்புடையது. முப்பத்திமூன்று இஸ்லாமிய நாடுகளும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகின்றன. தமிழகத்தில் ஐயப்பன் புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதில் சிறு குரலாக எனது குரல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். ஆன்மிகத்தை பின்பற்றாமல்விட்டால் உங்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளுக்கும் மனநிலை பாதிப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது. ஏனென்றால் நீங்கள் பின்பற்றும் கொள்கை அப்படிபட்டது’’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com