'சிறைவாசிகளை 14 ஆண்டுகளுக்கு முன் விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம்' - உச்சநீதிமன்றம்

'சிறைவாசிகளை 14 ஆண்டுகளுக்கு முன் விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம்' - உச்சநீதிமன்றம்
'சிறைவாசிகளை 14 ஆண்டுகளுக்கு முன் விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம்' - உச்சநீதிமன்றம்

ஆயுள் தண்டனை கைதிகளை 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிப்பதற்கு முன்பே விடுவிக்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மாநில அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே ஆளுநர் விடுவிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை என ஹரியானா அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு கொண்டுவந்த கொள்கை திட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பின்பற்றி, ஹரியானா அரசு தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், 433 - ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டு கால தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், 14 ஆண்டுகள் சிறைவாசம் முடியாத கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், இதில் மாநில அரசின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com