இந்திய- சீன எல்லையில் என்ன நடக்கிறது ? - ராகுல் காந்தி கேள்வி
எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய - சீன எல்லையில் சில நாள்களாகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 5ம் தேதி காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள் சீன வீரர்கள் புகுந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பும் தாக்கிக்கொண்டனர். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், சீன எல்லையில் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே சில நாள்களுக்குப் பிறகு சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்பட்டது. இப்படித் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருதரப்பினரும் வீரர்களைக் குவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ர்மப் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இருநாடுகளும் இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில் "இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் என்ன நடக்கிறது. எல்லைப்பகுதியில் நடப்பது குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது நெருக்கடியான இந்நேரத்தில் பல்வேறு சந்தேகங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது. உண்மையில் எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.