ஆந்திரா ரயில் விபத்து... மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் சிக்னல் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயில் மீது ராயகட்ட பேசஞ்சர் ரயில் மோதியது. இந்த விபத்தில் பலாசா பேசஞ்சர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு 6 பேர் மரணம் அடைந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

எப்படி விபத்து நடந்தது?

நேற்று மாலை விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட விசாகப்பட்டினம் பலாச பேசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே மின் வயர் அறுந்து விழுந்து சிக்னல் பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகட்ட நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 8 மணி அளவில் நின்று கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயிலின் பின்பகுதியில் ராயகட்ட எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலாசா பாசஞ்சர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அவற்றில் இருந்த பயணிகளில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 8 பேர் உடல் நசுங்கி மரணம் அடைந்தனர்.

மீட்பு பணியில் ஏற்பட்ட சிக்கல்!

விபத்து பற்றிய தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். இடைப்பட்ட நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளூர் ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் விபத்து நடைபெற்ற காரணத்தால் அந்த பகுதியில் கடுமையான இருட்டு நிலவியது. எனவே மீட்பு பணியில் பெருமளவில் இடையூறுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஆந்திர முதல்வரின் உத்தரவின் பேரில் ஆந்திர மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மின்தடை ஏற்பட்ட காரணத்தால் ராட்சத ஜெனரேட்டர்கள் ரயில் மூலம் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணியில் விளக்குகள் அமைக்க பயன்படுத்தப்பட்டன. அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணம் அறிவித்த மாநில மற்றும் மத்திய அரசுகள்!

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பிரதமர் திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும், உயிரழிந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில் விபத்திற்கு தமிழ்நாடு முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com