60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல்கான் குற்றமற்றவர்: விசாரணை அறிக்கை
கோரக்பூரில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கபீல் கான் குற்றமற்றவர் என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயின. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி, மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கபீல் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாதத்துக்குப் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
அவர் மீது மருத்துவ அலட்சியம், ஊழல், கடமையை சரியாக செய்யாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அதில், இந்த சம்பவத்துக்கு மருத்துவர் கபீல் கான் காரணமல்ல என்றும் அவர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத்தான் பாடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைவாகத்தான் இருக்கிறது என்று முன் கூட்டியே அவர் எச்சரிக்கை செய்ததாகவும் அவரே சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி குழந்தைகளை காக்க போராடியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மருத்துவர் கபீல் கான் கூறும்போது, ‘நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்’ என்றார்.