உ.பி.யில் 5 நாட்களில் 60 குழந்தைகள் சாவு: விசாரணைக்கு உத்தரவு
உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் உயிரிழந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் 35 குழந்தைகள் உயிரிழந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 7 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்தாக அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். ஆனால் இந்த விவகாரம் பரபரப்பானதை அடுத்து கடந்த 7ம் தேதியில் இருந்து வெள்ளிக்கிழமை
வரை 60 குழந்தைகள் உயிரிழந்ததை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
அந்த மருத்துவமனைக்கு திரவ ஆக்சிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ம் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் பல்வேறு நோய்களினால்தான் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக்கூறி உள்ள அமைச்சர் சித்தார்த்நாத் சிங், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே கோரக்பூர் மருத்துவமனையை எதிர்க்கட்சி தலைவர்கள் மொய்த்து வருகின்றனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.