ஸ்மார்ட்ஃபோனில் ஆதார் சேவை எண் : மன்னிப்பு கேட்ட கூகுள்
ஆதார் இலவச தொலைபேசி சேவை எண் மொபைல் ஃபோன்களில் தானாகவே பதிவானது குறித்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆதார் தகவல்களை பெறுவதற்கான இலவச சேவை தொலைபேசி எண்ணும் 112 என்ற உதவி கோரும் எண்ணும் ஆண்டிராய்டு ஃபோன்களில் 2014ம் ஆண்டே பதிவாகிவிட்டதாகவும் இது எவ்வித உள்நோக்கமும் இன்றி தற்செயலாக நடந்தது என்றும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது. இந்த எண்தான் மொபைல் ஃபோன்களின் கான்டாக்ட்ஸ் பட்டியலிலும் இடம் பெற்றுவிட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண் இருப்பதை விரும்பாதவர்கள் அதை தாமாகவே ஃபோன்களில் இருந்து நீக்கிக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பலரது ஆதார் தகவல்கள் சேவைக்கான 18003001947 என்ற இலவச தொடர்பு எண் அதுவாகவே ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவாகியிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தனிப்பட்ட அடையாள எண் ஆணையம் மறுத்திருந்தது. மேலும் குறிப்பிட்ட சேவை மைய எண் கைவிடப்பட்ட பழைய எண் என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்திருந்தது. மொபைல் ஃபோன்கள் உற்பத்தி நிறுவனங்களின் சங்கமும் சேவை மைய எண் பதிவானதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்திருந்தது. ஆதார் தகவல்களை யார் வேண்டுமானாலும் திருட முடியும் என ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் ஆதார் தொடர்பான ஒரு எண் தாமாகவே ஸ்மார்ட் ஃபோனில் பதிவானது பலரிடம் சந்தேகங்களையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.