உயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்

உயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்
உயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்

ஆந்திராவில் பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களுடன் பாடம் கற்றவந்த லங்கூர் குரங்கு லக்ஷ்மி உயிரிழந்தது

ஆந்திர மாநிலம் வெங்காலம்பள்ளி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு லங்கூர் வகை குரங்கு லக்ஷ்மி அடிக்கடி வந்து மாணவர்களுடன் பள்ளி அறையில் அமரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அத்துடன் லக்ஷ்மி குரங்கு மாணவர்களுடன் விளையாடும் படங்களும் வெளியானது. இந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. 

இந்நிலையில் தற்போது இந்த லக்ஷ்மி குரங்கு சில நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இந்தக் குரங்கின் மரணத்தால் அரசுப் பள்ளி முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் நண்பர் ஒருவரை இழந்தது போல் ஆழந்த துயரத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் லக்ஷ்மியை தங்களது சக மாணவரை போல் நடத்தி வந்தனர். 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் லடீப் தி நியூஸ்மினிட் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “சில இளைஞர்கள், லக்ஷ்மி நாய்கள் கூட்டத்தால் தாக்கப்படுவது தொடர்பாக எனக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நான் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பு அந்த நாய்கள் கூட்டம் லக்ஷ்மியை கொன்று விட்டன. பத்து நாட்களுக்கு முன்பு, நாங்கள் இல்லாத போது லக்ஷ்மியை ஒருவர் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து லக்ஷ்மி மீண்டும் வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தோம். 

அதன்படி லக்ஷ்மி நேற்று இரவு திரும்பி வந்தது. அத்துடன் காலை பள்ளிக்கும் வந்தது. எனவே மீண்டும் மாலை லக்ஷ்மி பள்ளிக்கும் வரும் என்பதால் வாழைப்பழங்களை வாங்கி வைத்திருந்தேன். எனினும் லக்ஷ்மி திரும்பிவரவில்லை. லக்ஷ்மியின் மரணத்தால் பள்ளி மாணவர்கள் அனைவரும் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். லக்ஷ்மியுடன் மிகவும் நெருக்கமாக நட்புடன் இருந்த இரண்டு மாணவர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். 

எப்போது எல்லாம் நாங்கள் லக்ஷ்மியை பள்ளி அறைக்கு வெளியே விட்டோமோ அப்போது எல்லாம் நல்ல மாணவரை போல் வெளியே இருந்து பாடத்தை கவனிக்கும். லக்ஷ்மி தினமும் பள்ளிக்கு வருகை தந்ததால் இதனை காண பள்ளிக்கு மாணவர்கள் அதிகளவில் வர ஆரம்பித்தனர். அத்துடன் லக்ஷ்மியின் வருகையால் எங்களது பள்ளி மிகவும் பிரபலமானது. தற்போது லக்ஷ்மி இல்லாததது மிகவும் வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இளைஞர்கள் ஊருக்கு வெளியே லக்ஷ்மியை தகனம் செய்ததது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com