பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்: விமானியை அதிரடியாக நீக்கிய 'கோ ஏர்' ஏர்லைன்!

பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்: விமானியை அதிரடியாக நீக்கிய 'கோ ஏர்' ஏர்லைன்!

பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்: விமானியை அதிரடியாக நீக்கிய 'கோ ஏர்' ஏர்லைன்!
Published on

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்ததாக, இந்திய விமானப்படையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பைலட்டை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது 'கோ ஏர்' விமான நிறுவனம்.

இந்திய விமானப்படை முன்னாள் வீரர் பைலட் யுனிஷ் மாலிக். மிக்கி மாலிக் என அறியப்படும் யுனிஷ் மாலிக் 25 ஆண்டுகள் வி.வி.ஐ.பி படை விமானியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2010ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஃப்-ல் இருந்து குரூப் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2004ல் சுனாமி ஏற்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை கிரேட் நிக்கோபருக்கு அழைத்துச் சென்ற பைலட் மாலிக்தான். இந்திய விமானப்படையில் மிக அறியப்படும் நபராக வலம் வந்த மாலிக், ஓய்வுக்கு பின் 'கோ ஏர் ஏர்லைன் விமானியாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்திய விமானப்படை அதிகாரிகள் வட்டத்தில் `நல்ல விமானி' எனப் பெயர் வாங்கிய மாலிக் கடந்த வியாழக்கிழமை ஒரு சர்ச்சையில் சிக்கினார். தனது ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் ஒரு முட்டாள். இதை சொல்வதற்காக நீங்கள் என்னை முட்டாள் எனலாம். அப்படி சொன்னாலும் பரவாயில்லை. நீங்கள் சொல்வது எனக்கு ஒரு பொருட்டல்ல. காரணம், நான் ஒன்றும் பிரதமர் கிடையாது. ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்" என்று பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து இருந்தார். இதேபோல் இந்து கோயில்களை மையப்படுத்தியும் சில ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட் பதிவிட்ட சில மணிநேரங்களில் அது வைரலாகி கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதன்பின் சர்ச்சைக்கு மன்னிப்பு தெரிவித்த மாலிக், ``எனது ட்வீட் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துகள். அதற்கும், 'கோ ஏர்' ஏர்லைன் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்று கூறி சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்களை தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இதற்கிடையே, தற்போது ``இதுபோன்ற விஷயங்களில் தங்கள் நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், அதன் ஊழியர்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும்" என்று கூறி 'கோ ஏர்' நிறுவனம் மாலிக்கை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com