”மீண்டும் மன்னிப்பு கேட்க முடியாது” - கோவா மருத்துவர் விவகாரத்தில் பாஜக அமைச்சர் உறுதி!
கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாஜக அமைச்சர் விஸ்வஜித் ரானா ஆய்வுக்குச் சென்றார். அப்போது மக்கள் முன்னிலையில் மருத்துவர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் விஸ்வஜித் திட்டினார். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். எவ்வித விசாரணையும் நடத்தாமல் பலா் முன்னிலையில் அமைச்சா் இவ்வாறு நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) கோவா மருத்துவா்கள் கூட்டமைப்பு ஆகியவையும் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. நடந்ததை முழுமையாக விசாரிக்காமல் மருத்துவரிடம் கடுமையாக நடந்துகொண்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வா் பிரமோத் சாவந்த், சுகாதார அமைச்சா் விஸ்வஜித்துடன் பேசியதுடன், மருத்துவா் ருத்ரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படமாட்டாா் என்று உறுதியளித்தாா். எனினும், அமைச்சா் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மருத்துவா்கள் போராட்டம் நடத்தினா். தேசிய அளவில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடர்ந்து பாஜக அமைச்சர் விஸ்வஜித் மன்னிப்பு கோரினார். அவர், ”மருத்துவா் ருத்ரேஷிடம் மனப்பூா்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது மிகவும் கடுமையான வாா்த்தைகளைப் பேசிவிட்டேன். மிகவும் உணா்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டேன். அந்தச் சூழலை சரியாக எதிா்கொள்ளாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவா்களை கண்ணியக் குறைவாக நடத்த வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கு இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத மருத்துவர் ருத்ரேஷ், ”என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்திருந்தார். இதற்கு அமைச்சர், “மீண்டும் மருத்துவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை” எனத் தெர்வித்துள்ளார். இதுகுறித்து அவர், “மருத்துவரிடம் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன். நீங்கள் அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு என்ன எதிர்பார்க்க முடியும்? என் தரப்பில் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் இருக்காது. மேலும் நாம் இருவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது அவசியம். நமது பிரச்னை என்னவென்றால், நாம் இருவரும் சமரசம் செய்து, ஒன்றாக ஒரு கப் தேநீர் அருந்தி பிரச்னையை தீர்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.