‘உங்கள் வாயை முதலில் டெட்டால் போட்டு கழுவுங்க’ - காங். எம்பிக்களை சாடிய நிர்மலா சீதாராமன்
‘ஊழல் பற்றி பேசுவதற்கு முன்னால் டெட்டால் போட்டு உங்கள் வாயைக் கழுவுங்கள்’ என்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வாரம் தாக்கல் செய்த 2023-24 பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியை காட்டமாக தாக்கினார். "ஊழலைப் பற்றி பேசுவது யார்? காங்கிரஸ் கட்சியா?" என அவர் ஆவேசமாக மக்களவையில் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ஊழலைப் பற்றி பேசுவதுதான் விந்தையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்னர் டெட்டால் ஊற்றி வாயை கழுவ வேண்டும். அப்படி டெட்டால் ஊற்றி வாயை கழுவினாலும் சுத்தமாகிவிடாது.
ஆளும் பாஜக மீது விமர்சனம் வைக்க வேண்டியது. பின்னர், அதற்கு நாங்கள் பதில் அளிக்கமுன்வரும்போது அதை கேட்டு ஒன்று சலசலப்பை உருவாக்குகிறார்கள் அல்லது சபையை விட்டு வெளிநடப்பு செய்கிறார்கள். ராஜஸ்தான் முதல்வர் கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்துள்ளார். தவறுகள் நிகழ்வது இயல்பானதுதான். ஆனால் இப்படியான ஒரு பிழையை இனியாரும் செய்யக் கூடாது எனக் கடவுளை பிரார்த்திக்கிறேன்” என அவர் காங்கிரஸ் கட்சியை நையாண்டி செய்தார்.
அத்துடன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் "கார்ப்பரேட் பே மாஸ்டர்" என்கிற வார்த்தை சரியானது அல்ல எனவும், அதை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றன எனவும், அவர்களை "கார்ப்பரேட் பே மாஸ்டர்" என குறிப்பிடுவது சரியாகாது எனவும், அதே போல மத்திய அரசு தொடர்பான இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனம் தக்கது அல்ல என்பது அவரது வாதமாக இருந்தது. நாத்திக கொள்கை கொண்ட திமுகவைச் சேர்ந்த அப்துல்லா "ராகு காலம்" மற்றும் "எமகண்டம்" போன்ற "பஞ்சாங்க" வார்த்தைகளை பயன்படுத்துவது ஆச்சரியமூட்டியது எனவும் நகைச்சுவையாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
முன்னதாக நேற்று ராஜஸ்தான் சட்டபேரவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அம்மாநில முதல்வருமான அசோக் கெலாட், இந்த ஆண்டு பட்ஜெட்டிற்குப் பதிலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டையே சுமார் 8 நிமிடங்கள் வாசித்தது குறிப்பிடத்தக்கது.