“ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர் வேறு கிரகம் போகலாம்” - கேரள பாஜக பதிலடி

“ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர் வேறு கிரகம் போகலாம்” - கேரள பாஜக பதிலடி
“ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர் வேறு கிரகம் போகலாம்” - கேரள பாஜக பதிலடி

ஜெய்ஸ்ரீ ராம் முழக்கத்தை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லலாம் என கேரள பாஜக செய்தித் தொடர்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கதையாகி வருவதாகவும், இதுபோன்ற குற்றங்களை தடுத்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 49 பேர் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஜெய் ஸ்ரீராம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது, அதற்கான நடவடிக்கையும் வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதுபோன்ற தாக்குதலை மீண்டும் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரும் அளவிற்கு ஆயுள் தண்டனை போன்ற கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் உள்ளிட்ட 49 பேர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லலாம் என கேரள பாஜக செய்தித் தொடர்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இந்தியா மட்டுமில்லாமல் அண்டை நாடுகளிலும் ஒலிக்கும். அதனை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் தங்களது பெயரை ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்து நிலவு அல்லது வேறேதும் கிரகத்திற்கு செல்லலாம். இந்திய மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வாக்களித்துள்ளனர். அவர்களின் அந்த முழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒருவேளை தேவைப்பட்டால் அடூர் கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பும் கோஷம் போடப்படும். இது ஒரு ஜனநாயக உரிமை. இந்தியாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடக் கூடாது என்றால் வேறு எங்கு போய் கோஷமிடுவது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ நீங்கள் ஒரு மரியாதைக்குரிய இயக்குநர். ஆனால் மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிராக நீங்கள் கண்டனம் தெரிவிக்க இயலாது. இந்துக்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டதற்காக அவர்களை மம்தா பானர்ஜி சிறையில் அடைத்தாரே..? சரண கோஷம் எழுப்பியதற்காக பினராயி விஜயன் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்தாரோ அப்போது எல்லாம் நீங்கள் ஏன் மவுனமாக இருந்தீர்கள்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “ இந்த விஷயத்தில் யாரின் மிரட்டலுக்கும் நான் அடிபணியப் போவதில்லை. என்னை போன்றவர்கள் வேறு கிரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை மாநில மக்கள் முடிவு செய்யட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com