விவசாயிகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ஜி.கே.வாசன்
டெல்லியில் விவசாய பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்றிரவு 7.30 மணிக்கு ஜி.கே.வாசன் சந்தித்து பேசுகிறார்.
டெல்லியில் தங்களது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் 15-ஆவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு மற்ற மாநில விவசாயிகளும் தங்களது ஆதரவினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று இரவு 7.30 மணிக்கு அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.