ஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்!
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலரை அடித்து உதைத்த பொது மக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை வள்ளியூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் வேலிமலையைச் சேர்ந்த மெர்சி. கடை விடுதியிலேயே அவர் தங்கியிருந்தார். மெர்சி வேலை பார்த்த கடையில் பொறியியல் பட்டதாரியான ரவீந்திரன் பணிக்கு சேர்ந்திருக்கிறார். மெர்சியை ரவீந்திரன் காதலித்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை ஏற்க மெர்சி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் துணிக்கடையில் இருந்து ரவீந்திரன் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.
சில மாதங்கள் கடந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணியை முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மெர்சி. அவர் வரும் வழியில் ரவீந்திரன் காத்திருந்ததாக தெரிகிறது. மெர்சியை கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
பொது இடத்தில் ஒரு பெண்ணை குத்திவிட்டு எந்த பதற்றமுமின்றி நடந்து சென்றுள்ளார் ரவீந்திரன். இதைப் பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பின்னர் சுதாரித்துக் கொண்டு ரவீந்திரனை பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே படுகாயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெர்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.