பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை: அப்பாவின் நண்பர் கைது
10-ம்வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அப்பாவின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குர்கான் பகுதியில் உள்ள பட்டோடி பகுதியை சேந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இவரது தந்தை ஆட்டோ டிரைவர். கடந்த சனிக்கிழமை உமா வீட்டில் இருந்து காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த உமா, தன்னை அப்பாவின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறிவிட்டு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உமாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். அவர்கள் உமாவின் அப்பாவுக்கு வேண்டிய ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. உமாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ள அந்த ஆட்டோ டிரைவர், யாருமில்லாத நேரத்தில் அவரை மிரட்டி கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டியதால் உமா பயந்து போய் சொல்லவில்லை. கடந்த சனிக்கிழமை அவரது வீட்டுக்கே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், வெளியே தெரிந்தால் விவகாரமாகிவிடும் என்று நினைத்து விஷத்தை கொடுத்துள்ளார். இதையடுத்தே உமா மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொடுமைக்கார டிரைவருக்கு உமா வயதில் ஒரு மகள் இருக்கிறாளாம்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமா நேற்று மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.