பாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா ? பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவி !
உ.பி.யில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை தனது காலணியால் அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தொந்தரவுகளும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எப்போது ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்காத பெண்களே இல்லை. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த வியாழக்கிழமை 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து திரும்பும் வழியில் தன்னை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்த 25 வயது நபர் ஒருவரை தனது காலணியால் பொதுவெளியிலேயே தாக்கி பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். ஆனால், ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் அந்த சிறுமி தனது பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவியை பள்ளியின் முதல்வர் அழைத்து அவரது இடமாற்று சான்றிதழ் (Transfer Certificate)-ஐ
பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு பள்ளியின் முதல்வர் விளக்கமும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், அந்த மாணவி இவ்வாறான செயலில் ஈடுபட்டதால் பள்ளியின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்துவிட்டதாக கூறியுள்ளார். ‘எனக்கு நடந்த பாலியல் தொந்தரவை நான் ஊதி பெரிதாக்கி கலங்கம் விளைவித்துவிட்டதாக என்னிடம் கூறினார்’ என அந்த மாணவி தெரிவித்தார்.
தனக்கு எதிராக ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தால் தன்னை காத்துக்கொள்ள அதை தட்டிக்கேட்டு துணிச்சலாக ஒரு பெண் செயல்படுவது தவறா?
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தண்டனை தருவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இது மற்ற பெண்களின் குரலையும் ஒடுக்கும் செயல் என பல்வேறு எதிர்ப்புகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கூறுகையில், வகுப்புகள் முடிவதற்கு முன்பே மாணவி பள்ளியை விட்டு சென்றுவிட்டதாகவும் இதுபோன்ற ஒழுங்கற்ற செயல் மற்ற மாணவர்களையும் விதிகளை மீற தூண்டிவிடும், அதனால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மாணவி மீது எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், பள்ளி ஆசிரியை ஒருவர் இதுகுறித்து கூறுகையில், தனக்கு எதிராக ஒன்று நடக்கையில் தன்னை காத்துக்கொள்ள துணிச்சலாகவும் தைரியமாகவும் ஒரு மாணவி செயல்படும்போது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறி பள்ளியில் இருந்த நீக்குவது மற்ற மாணவிகள் குரல்களையும் ஒடுக்கிவிடும், இது வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Credits- Hindustan Times