ஓடும் காரின் மீது மதுபோதையில் நடனமாடிய இளைஞர்கள் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்
காசியாபாத்தில் மதுபோதையில் ஓடும் கார் மீது நடனமாடிய இளைஞர்களின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர்களை கைது செய்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர் காவல் துறையினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள தில்லி-மீரட் விரைவுச் சாலையில் இளைஞர்கள் இருவர் குடிபோதையில் தங்கள் காரின் மீது நடனமாடினர். காரில் இருந்தவர்களும் மதுபோதையில் காரை இயக்கியுள்ளனர். இந்நிலையில் சாலையில் சென்றவர்களில் ஒருவர் இளைஞர்கள் கார்மீது நடனமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். காசியாபாத் காவல்துறையை டேக் செய்து அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.
இதையடுத்து வீடியோவில் இருந்த காரின் பதிவெண்ணை வைத்து உரிமையாளரை தேடியது காசியாபாத் போக்குவரத்து காவல்துறை. பின்னர் உரிமையாளரை விசாரித்து கார் மீது நடனமாடிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர் காவல்துறையினர். காருக்குள் அமர்ந்து மதுபோதையில் காரை இயக்கிய இளைஞர்களையும் கைது செய்தது.
அனைவரும் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோவை தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது காசியாபாத் போக்குவரத்து காவல்துறை. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.