பாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர் 

பாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர் 
பாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர் 

இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னைகள் இருந்தபோதிலும், பாகிஸ்தானை சேர்ந்த 7 வயது குழந்தையான ஓமைமா அலிக்கு  இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஓமைமா அலி. இவருக்கு தற்போது ஏழு வயது. ஓமைமா அலி பிறவியிலேயே இதயம் சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். மகளுக்கு இருந்த பாதிப்பால், அவர்களது பெற்றோர்களும் நிம்மதி இல்லாமல் வேதனையில் தவித்தனர். பாகிஸ்தானின் பல இடங்களில் ஓமைமாவிற்கு சிகிச்சை எடுத்த அவர்கள்,  கடந்த 2012-ஆம் ஆண்டு அதாவது ஓமைமா பிறந்த ஆண்டே, இந்தியாவின் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்தனர். அதன்படி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓமைமாவிற்கு சிகிச்சை அளித்த நொய்டா மருத்துவர்கள் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்தனர். அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பிய ஓமைமாவின் பெற்றோர்கள், குழந்தையை அங்கேயே கவனித்து வந்தனர்.

இதனிடையே சமீபத்தில் சிறுமி ஓமைமாவிற்கு மீண்டும் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடிவெடுத்த பெற்றோர், இதுதொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் பாகிஸ்தான் வீரர் முகமது யூசப்பின் உதவியை நாடியுள்ளனர். யூசப்போ, இந்திய கிரிக்கெட் வீரரும், பா.ஜ.கவின் எம்.பியுமான கௌதம் காம்பீரை தொடர்பு கொண்டு, ஓமைமாவிற்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி காம்பீரிடம் கோரிக்கை வைத்தார். 

இதனை உடனே ஏற்றுக்கொண்ட காம்பீர், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். காம்பீரின் கடிதத்தை பெற்ற ஜெய் சங்கர், இஸ்லாமாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு ஓமைமா அலி மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான பதில் கடிதத்தை கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி காம்பீருக்கு அனுப்பியுள்ளார் ஜெய் சங்கர். இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காம்பீர் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு சிறிய இதயம் அந்த பக்கத்தில் இருந்து கதவை தட்டியது என்றும், அதற்காக இந்தப் பக்கத்தில் உள்ள இதயம் எல்லா பிரச்னைகளையும் நீக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு, கால்களை தென்றல் வருடட்டும் என்றும் சில நேரங்களில் ஒரு மகள் தனது வீட்டிற்கு வந்ததுபோல் உணர்கிறேன் என்றும் என்றும் பதிவிட்டுள்ளார். 

இது மட்டுமல்லாமல் இதற்கு உதவிகரமாக இருந்த ஜெய் சங்கர், பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக தனக்கு ஓமைமாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com