\
 DK Shivakumar
dk Shivakumarani

அதானியை எதிர்க்கும் காங்கிரஸ்.. டி.கே.சிவகுமாரை தேடிவந்த அதானி - கர்நாடகாவில் திடீர் திருப்பம்?

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி சந்தித்தது, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Published on

அதானி குழுமத்தின் மீதும், அதன் நிறுவனத் தலைவர் அதானி மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ’க்ரோனி முதலாளித்துவம்’ என அதானி குழுமத்தின் மீதும், மத்திய அரசு மீதும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், நேற்று பெங்களூரு சதாசிவநகரில் உள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இல்லத்திற்கே சென்று கௌதம் அதானி சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gautam Adani
Gautam AdaniReuters

இந்தச் சந்திப்பு குறித்து விளக்கமளித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், "நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அதானி என்னைச் சந்திப்பது இதுவே முதல் முறை. மாநிலத்தில் அவர் பல தொழில்களைச் செய்து வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எந்தத் தொழில் சார்ந்த விஷயங்களும் விவாதிக்கப்படவில்லை" என்று விளக்கமளித்திருகிறார்.

இந்நிலையில், அம்மாநில பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.அசோகா இந்த சந்திப்பை கடுமையாக விமர்சித்திருக்கிறார். "டெல்லியில் அதானியை கடுமையாக எதிர்த்துப் பேசும் காங்கிரஸ், கர்நாடகாவில் அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இது காங்கிரஸின் அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது" எனவும், "அதானியைச் சந்திக்க ராகுல் காந்தி சிவகுமாருக்கு அனுமதி அளித்தாரா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi ANI

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள 16.75 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதை சாலைத் திட்டத்திற்கான டெண்டரில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு முதலிடத்தில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத சூழலில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com