கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம்: சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பத்திரிகையாளர் மன்றத்தில் ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அங்கிருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரியை கொலை செய்த நபர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், அவர்களுக்கு எழுத்து மற்றும் கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பதாதைகளை ஏந்திச் சென்றனர். பேரணி சென்ற பத்திரிகையாளர்கள் வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர் ஒருவர் பேசும் போது, "தெற்காசியாவில் இந்தியாவில்தான் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பில் மோசமான நிலை உள்ளது. சிறிய அளவிலான எதிர்ப்பு உணர்வை, விமர்சனத்தை தாங்க முடியாத நிலையையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் விஷயம்" என்றார்.

