தரையில் விழுந்த சிலிண்டர்.. அடுத்து நடந்த பயங்கரம்.. டெல்லியில் அதிர்ச்சி!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
டெல்லி ஓக்லா பேஸ்-1 (Phase-I) பகுதியில் இன்று காலை வணிக பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. காவல்துறை தகவலின்படி, காலை சுமார் 10.43 மணியளவில் ஓக்லா பேஸ்-1 பகுதியில் உள்ள D-23 என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. SM Traders நிறுவனத்துக்குச் சொந்தமான Tata 407 வாகனம், காசியாபாத்தில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
வாகனத்தில் இருந்த சிலிண்டர்களை தொழிலாளர்கள் இறக்கி, அருகில் உள்ள குடோனுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஒரு சிலிண்டர் வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த சிலிண்டர் வெடித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான சரியான தொழில்நுட்ப காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடம், சிலிண்டர், வாகனம் உள்ளிட்டவற்றை தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே காரணம் தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், 35 வயதான தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மோகித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர், தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டர்களை உள்ளூர்ப் பகுதிகளில் விநியோகம் செய்யும் SM Traders நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில், உமேஷ், அரவிந்த், மனோஜ் மற்றும் பங்கஜ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
SM Traders நிறுவனம் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1 முதல் 2 ஆண்டுகளாக அங்கு நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. காசியாபாத்தில் இருந்து நிரப்பப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று, ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த குடோனில் ஆக்சிஜன் நிரப்பும் ஆலை எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தினமும் சுமார் 70 முதல் 80 சிலிண்டர்கள் வரை இந்நிறுவனத்துக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
சிலிண்டர்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றை வழங்கிய நிறுவனத்தின் விவரங்கள் என்ன, சிலிண்டர்களின் உரிமையாளர் யார், அவற்றைச் சேமித்து வைக்கவும் கையாளவும் கொண்டு செல்லவும் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் உள்ளனவா என்பதையும் காவல்துறை விசாரித்து வருகிறது.
விபத்து நடந்த குடோன் மூடப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிலிண்டர் வெடித்ததற்கான சரியான காரணமும், விபத்து நடந்த சூழ்நிலையும் விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

